Live Budget Session : `நாடு பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது..!' - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Vikatan February 01, 2025 01:48 AM
`நாடு பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது’

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ``நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.... பாதுகாப்புத் துறையிலும் தன்னம்பிக்கை அடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேக் இன் இந்தியாவிலிருந்து, உலகை உருவாக்க நாங்கள் நகர்ந்துள்ளோம்.

வடகிழக்கின் எட்டு மாநிலங்களின் திறனை முழு நாடும் காண உதவும் வகையில், முதல் அஷ்டலட்சுமி மஹோத்சவம் ஏற்பாடு செய்யப்பட்டது." என்றார்,

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு,

``இன்று நமது இளைஞர்கள் ஸ்டார்ட்அப்கள் முதல் விளையாட்டு, விண்வெளி வரை அனைத்துத் துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்... செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது.

இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா ஒரு முக்கிய உலகளாவிய தனது இருப்பை உணர வைக்கிறது... உலகின் வளர்ந்த நாடுகளும் இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறையின் வெற்றியால் ஈர்க்கப்பட்டுள்ளன. எனது அரசு சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஒரு கருவியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மெட்ரோ ரயில் திட்டம் இப்போது 1000 கிலோமீட்டர் மைல்கல்லைக் கடந்துவிட்டது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ திட்டத்தை கொண்டுள்ளது.

அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் 'ஆரோக்கிய மந்திர்' நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றிருக்கிறார்,

`ஒரே நாடு, ஒரு தேர்தல், வக்ஃப் சட்டத்திருத்த மசோதா..!’

தொடர்ந்து தனது உரையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு,

`` - ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனது அரசாங்கம் இளைஞர்களின் கல்வி மற்றும் அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

"ஒரே நாடு, ஒரு தேர்தல்' மற்றும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதை நோக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் எனது அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது... அதனால் 3 கோடி 'லக்பதி தீதி' களைக் உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசு உறுதியோடு இருக்கிறது.

இன்று ஏராளமான பெண்கள் போர் விமானங்களை ஓட்டுவதில் தொடங்கி, காவல்துறையில், நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவதில் எனத் தொடர்ந்து பங்களித்து வருவது நாடாளுமன்றத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயம். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை மேலும் பெருமைப்படுத்துகிறார்கள்.” என்றிருக்கிறார்.

``அம்பேத்கருக்கு நான் தலைவணங்குகிறேன்” - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “எனது அரசு பழங்குடி சமூகத்தின் ஐந்து கோடி மக்களுக்காக ‘தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம், சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தோம்... அனைத்து இந்தியர்களின் சார்பாகவும், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு குழுவில் உள்ள அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இது நமது கலாச்சார மரபுகள் மற்றும் சமூக விழிப்புணர்வின் திருவிழா. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்றார்.

குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்றத்தில் தனது உரையை தொடங்கிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...

``அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறேன். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

`இந்தியா 100-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது..!’

பிரதமர் மோடி, ``இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாள். அதனால், செழிப்பின் அடையாள தெய்வமான மகாலட்சுமியை வணங்குகிறேன். நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களை ஆசீர்வதிக்க மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 'விக்சித் பாரத்' என்ற நமது இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கையையும், ஆற்றலையும் அளிக்கும் என நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டுசெல்ல நாட்டு மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பொறுப்பளித்திருக்கின்றனர்.

பிரதமர் மோடி

இது எனது மூன்றாவது பதவிக்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் முதல் முழுமையான பட்ஜெட். 2047-ம் ஆண்டில், இந்தியா 100-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, இந்த நாடு விக்சித் பாரத்தாக மாறும். அதற்கு இந்த பட்ஜெட் புதிய நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் வழங்கும். நூற்று நாற்பது கோடி இந்தியர்கள் தங்கள் கூட்டு முயற்சிகள் மூலம் நாட்டை விக்சித் பாரத்தாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட்..!

2025- 2026-ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்துவார். காலை 11 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில், இரு அவை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். இதற்கிடையில், நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்வார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்த பட்ஜெட் தாக்கல் மீது மூன்றுநாள்கள் விவாதம் நடக்கும். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 6-ம் தேதி விவாதங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 அமர்வுகள் கொண்ட இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்கட்ட அமர்வு 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாம்கட்ட அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிவரை நடக்கும் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.