தமிழ்த்திரை உலகில் திரைக்கதை மன்னன் என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கே.பாக்கியராஜ்தான். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்தால் போதும். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும்.
அதே போல அவரது படத்தில் எப்போதும் தாய்க்குலங்களைக் கவரும் வகையில் காட்சி அமைப்பு இருக்கும். குடும்பப்பாங்கான சென்டிமென்ட் கொண்ட படங்கள் அதிகம் இருக்கும். காதல் ரசம் சொட்டும் 80களின் படங்களும் பார்க்க பார்க்க திகட்டாமல் இருக்கும்.
இவருடைய படவரிசைகளில் இன்று போய் நாளைவா, சுவரில்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு, மௌன கீதங்கள், அந்த 7 நாள்கள் ஆகிய படங்கள் மறக்க முடியாதவை. அதிலும் மௌன கீதங்கள் படம் எப்போது பார்த்தாலும் சுவாரசியம் குறையாமல் இருக்கும். இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் கங்கை அமரன்.
அந்த வகையில் டைட்டில் கார்டு போடும்போது பாக்கியராஜ் ஒரு குசும்பு செய்திருப்பார். அதாவது மௌன கீதங்கள் படத்தின் டைட்டில் கார்டில் கங்கை அமரன் பெயரைப் போடும் போது ஒரு கார்டூன் போட்டு இருப்பார். அதில் இளையராஜா ஒரு அறையில் உட்கார்ந்து இசைக்கான குறிப்புகளை எழுதிக்கொண்டே இருப்பார்.
கங்கை அமரனோ அவருக்குத் தெரியாமல் கதவின் பின் மறைந்து கொண்டு கையை நீட்டி அவரது இசைக்குறிப்புகளை எடுத்து பாடலுக்கான கம்போசிங் அமைப்பதைப் போன்று காட்டி இருப்பார். அதாவது இளையராஜாவின் தம்பிதான் கங்கை அமரன். அவரிடம் இருந்துதான் இவரும் இசையைக் கற்றுக் கொண்டார் என்பதை எளிமையாக ஆனால் குசும்பாக சுட்டிக் காட்டி இருப்பார் இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ்.