விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர்... த.வெ.க பவர் சென்ட்டரான ஜான் ஆரோக்கியசாமி யார்?
Vikatan February 01, 2025 10:48 PM

கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரின் இணைப்பைத் தொடர்ந்து, உற்சாகத்தில் மிதக்கிறது தமிழக வெற்றிக் கழக வட்டாரம். புதிதாக வந்தவர்களுக்கும் சேர்த்து பொறுப்புகளை அறிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய், அந்த அறிவிப்பில் தன்னுடைய வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமியை முறைப்படி தெரிவித்திருக்கிறார். இதுநாள் வரையில், ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கும் தவெக-வுக்கும் வியூகம் வகுத்து அளிக்கிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டாலும், முதல்முறையாக அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். அந்த அறிவிப்பில், 'தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார்' என்றிருக்கிறார் விஜய்.

யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?

ஜான் ஆரோக்கியசாமியின் பூர்வீகம் ஆந்திரா. அக்கட தேசத்தில் பிறந்திருந்தாலும், படித்தது வளர்ந்தது எல்லாமே தமிழகத்தில்தான். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை லயோலா கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தவர், 'குட் ரிலேஷன் இந்தியா' என்கிற நிறுவனத்தில் சுமார் 11 ஆண்டுகள் இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். தொடர்ச்சியாக, ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்டிங் பிரிவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றியவர், ஆப்பிள் மொபைல் போன்களை இந்தியாவில் மார்க்கெட் செய்வதற்கு பல்வேறு வியூகங்களையும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஜான் ஆரோக்கியசாமி

அரசியல் மீது அலாதியான ஆர்வம் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, மும்பை மாநகராட்சித் தேர்தலின்போது சிவசேனாவுக்காக தேர்தல் வியூகம் வகுத்து தந்திருக்கிறார். அவரது வியூகத் திறனைப் பார்த்துவிட்டு, தன்னுடைய மகன் ஆதித்ய தாக்கரேவின் தேர்தல் வெற்றிக்கான வியூக பணியையும் ஜான் ஆரோக்கியசாமியிடமே ஒப்படைத்திருந்தார் உத்தவ் தாக்கரே. மும்பையில் தாக்கரே, கர்நாடகாவில் சித்தராமையா, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என ஜான் ஆரோக்கியசாமியின் தொடர்புகள் இந்தியா முழுவதும் பரந்துவிரிந்துள்ளன.

'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி'

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தனித்து போட்டியிட்ட பாமக, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது. 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்கிற பிரசாரத்தை தமிழகத்தின் கடைக்கோடி வரை கொண்டுச் சேர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை துடைத்தெறிந்து, அனைத்து சமூகங்களுக்குமான தலைவராக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'முதல் நாள் முதல் கையெழுத்து' என வித்தியாசமான மேடை அமைப்பில், உறுதிமொழி எடுத்துக் கொள்வதுபோல அன்புமணி செய்த பிரசாரம், அவர்மீது வன்னியர் அல்லாத சமூகங்களிடமும் 'சாப்ட் கார்னரை' உருவாக்கியது. அந்த தேர்தல் வியூகத்தை வடிவமைத்து, செயல்படுத்தியவர் ஜான் ஆரோக்கியசாமிதான்.

மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி:

2021 சட்டமன்றத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கும், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தது ஜான் ஆரோக்கியசாமி டீம். 'இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி' என சீமானுக்காக ஜான் ஆரோக்கியசாமி வழங்கிய அடைமொழி, திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில், ஆறு சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்று, தமிழக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது நாம் தமிழர் கட்சி. அப்போது சீமானுடன் ஜான் ஆரோக்கியசாமிக்கு உருவான நட்புதான், பின்னாளில் விஜய்யுடன் சீமான் நெருங்குவதற்கும் வழிவகுத்தது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட ஜான்

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனிநபர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக் கொடுப்பது, பொதுத்தளத்தில் ஒருவரை தலைவராக முன்னிறுத்துவது என வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வியூக வகுப்பாளராக ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்தார். அப்போதிருந்து, ஜான் ஆரோக்கியசாமியின் வியூகங்களைத்தான் விஜய்யும் தவெக-வும் செயல்படுத்தி வருகின்றன.

ஜான் ஆரோக்கியசாமி, விஜய் விஜய்க்கு ஆலோசகராகத்தான் ஜான்

வி.சாலையில் பிரமாண்டமாக கட்சியின் முதல் மாநாட்டை வடிவமைத்ததும், கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள், காமராஜர், வேலுநாச்சியார் ஆகியோரை கொண்டுவந்ததும், பரந்தூருக்கு விஜய் செல்ல ஆலோசனை வழங்கியதும் என ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனைகள்தான், தவெக-வை அடுத்தக் கட்டத்திற்கு அரசியல் அரங்கில் எடுத்துச் செல்ல ஆரம்பித்திருக்கின்றன.

நம்மிடம் பேசிய தவெக-வின் சீனியர் புள்ளிகள் சிலர், "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், தலைவர் விஜய்யுடன் ஒப்பந்தம் கையெழுத்திடும்போதே, விஜய்க்கு ஆலோசகராகத்தான் ஜான் ஆரோக்கியசாமி செயல்படுவார் என்பது ஒப்பந்தமானது. அதாவது, கட்சி நிர்வாகத்தை பொதுச் செயலாளர் ஆனந்தும், தலைவருக்கான வியூகம் வகுத்துக் கொடுக்கும் பொறுப்பை ஜான் ஆரோக்கியசாமியும் மேற்கொள்வார்கள் என தெளிவாக வரையறுக்கப்பட்டது.

என்றுமே, கட்சியின் தினசரி நிர்வாகத்தில் ஜான் ஆரோக்கியசாமி தலையிட்டது கிடையாது. மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில்கூட, 'இன்னார் வேண்டாம். இன்னாரை பதவியில் அமர்த்துங்கள்' என ஜான் ஆரோக்கியசாமி சொன்னதில்லை. தலைவர் விஜய்யை எப்படி பொதுத்தளத்தில் முன்னிறுத்துவது, தேர்தலில் கட்சியை எப்படி வெற்றியடைய வைப்பது, கட்சியை எப்படி பிரபலப்படுத்துவது, மக்களிடம் கொண்டுச் சேர்ப்பது என்பதுதான் அவருடைய பணியாக இருக்கிறது.

ஆதவ் அர்ஜுனாவின் பொறுப்பு.

இந்தச் சூழலில்தான், கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் என அறிவித்திருக்கிறார் விஜய். அதன்படி, கட்சியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்வதற்கான வியூகங்களை ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுப்பார். அந்த வியூகத்தை தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோருடன் கலந்துப் பேசி செயல்படுத்த வேண்டியது ஆதவ் அர்ஜுனாவின் பொறுப்பு.

ஏற்கெனவே, 'வாய்ஸ் ஆப் காமன்' என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஆதவ். அந்த நிறுவனமும் தவெக-வுக்காக களமிறங்கி, 120 மாவட்ட அமைப்புகளிலும் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுமென தெரிகிறது. நிர்வாகிகள் நியமனமெல்லாம் முடிந்தபிறகு, திமுக-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், போராட்டம், மண்டல அளவில் மாநாடுகள், தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் என விறுவிறு வேகமெடுக்கப் போகிறது தவெக" என்றனர்.

இதுவரையில், மூன்று கட்டமாக தவெக நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இம்மாத இறுதிக்குள் அனைத்து நிர்வாகிகளையும் நியமனம் செய்துவிட்டு, மாவட்ட அளவில் அணி நிர்வாகிகள் நியமனத்தையும் விரைந்து முடித்திட உத்தரவிட்டுள்ளாராம் தவெக தலைவர் விஜய். இதற்கிடையே, தவெக-விற்கான தேர்தல் வியூகத்தை ஜான் ஆரோக்கியசாமியுடன் கலந்துப்பேசி, அடுத்த 15 மாதத்திற்கான அஜெண்டாவையும் தயாரிக்கச் சொல்லியிருக்கிறாராம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.