ரத சப்தமி... நாளை முதல் திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து!
Dinamaalai February 02, 2025 12:48 PM

நாளை பிப்ரவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் சமீபத்தில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி  4ம் தேதி ரதசப்தமிக்காக  மினி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.  இந்த நாளில்  மாட வீதிகளில் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் உலா வருகிறார்.

பிப்ரவரி 4ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும்,  9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும் 11- 12 மணி வரை கருட வாகனத்திலும் பிற்பகல்  1 முதல் 2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையடுத்து பிற்பகல்  2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6- 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

ரதசப்தமி நடைபெறுவதையொட்டி திருமலை திருப்பதி கோயிலில்  பிப்ரவரி 3, 4, 5  தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அது போல் இலவச தரிசன டோக்கன்களும் விநியோகம் செய்யப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.