Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் காலையில் டீ உடன் பிஸ்கட் சாப்பிடலாமா?
Vikatan February 02, 2025 03:48 PM

Doctor Vikatan: எங்கள் வீட்டில் நான், என் கணவர், மாமனார் என மூன்று பேரும் சர்க்கரை நோயாளிகள். மூன்று பேருக்கும் காலையில் எழுந்ததும் டீ உடன், பிஸ்கட் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அப்படிச் சாப்பிடாவிட்டால் மயக்கமாக இருப்பது போல உணர்கிறோம். பிஸ்கட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகும் என்கிறார்கள் சிலர். இது உண்மையா? சுகர்ஃப்ரீ பிஸ்கட்தான் சாப்பிடுகிறோம். இது சரியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி

காலையில் ஒரு கப் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பால் கலந்த டீ என்றால், 200 மில்லி என்று கணக்கு வைத்துக்கொண்டால்கூட,  அதில் 120 கலோரிகள் இருக்கும்.  ஒருவேளை அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதில் 85 முதல் 90 கலோரிகள் இருக்கும்.  ஆக, ஒரு கப் டீயிலேயே உங்களுக்கு கிட்டத்தட்ட 210 கலோரிகள் வரை உடலில் சேர்ந்துவிடும்.

டீயுடன் 2 - 3  பிஸ்கட் சாப்பிடுவதாக வைத்துக்கொண்டாலும், ஒரு பிஸ்கட்டில் 80 கலோரிகள் என கணக்கிட்டாலும், 3 பிஸ்கட்டுகளில் 240 கலோரிகள்  சேரும். எனவே, டீ மற்றும் பிஸ்கட் எடுத்துக்கொள்வதன் மூலம் கிட்டத்தட்ட 450 கலோரிகள் சேர்கின்றன. இது 3 இட்லி சாப்பிடுவதற்கு இணையானது. அதனால்தான் சர்க்கரை நோயாளிகளை பால் சேர்க்காத காபி, டீ குடிக்கும்படி அறிவுறுத்துவோம். சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ, க்ரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்க அறிவுறுத்துவோம். 

சுகர்ஃப்ரீ என்ற அறிவிப்புடன் வரும் பிஸ்கட்டுகள் உண்மையில் அப்படித் தயாரிக்கப்படுவதில்லை. சர்க்கரைக்கு மாற்றாக வேறு ஏதேனும் இனிப்பு சேர்த்திருப்பார்கள். அதேபோல கார்போஹைட்ரேட் இல்லாத பிஸ்கட்டும் சாத்தியமில்லை.

ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது வேறு விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.

பிஸ்கட்டுகள் பெரும்பாலும் மைதா மாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. மைதாவில் கார்போஹைட்ரேட் அதிகம்.  காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடாவிட்டால் மயக்கம் வருவதாக உணர்வது என்பது அதற்கு நீங்கள் பழகியதன் விளைவுதான். அதை நிறுத்திப் பாருங்கள். ஒன்றிரண்டு நாள்களில் அந்த உணர்வு சரியாகும்.  

காலையிலேயே இதுபோன்ற கலோரி அதிகமான உணவு எடுத்துக்கொள்வதால், இன்சுலின் அதிகம் சுரந்து, நாளடைவில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது வேறு விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். உங்கள் கேள்வியை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் நடுத்தர வயதிலோ, அதைத் தாண்டியோ இருப்பதாகத் தெரிகிறது. இந்த வயதில் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறினால், பிற்காலத்தில் அது இன்னும் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் கவனமாக இருங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.