நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் கடன் ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் தமிழ்மணி. லாரி ஓட்டுநரான இவருக்கு யசோதா என்ற மனைவியும் 11-ம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் 2 மகன்களும் உள்ளனர். ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவது, ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு சூதாட்ட விளையாட்டுகளில் இவர் ஈடுபட்டிருந்தார். இதனால் இவர் சுமார் 75 லட்ச ரூபாய் வரை கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தந்னுடைய கடனை திருமபச் செலுத்த முடியாத சூழ்நிலையில் அவரது நண்பரின் பஞ்சர் ஒட்டும் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சாவுக்கும், தான் கடன் பெறவும் காரணமாக இருந்த நித்திய பிரகாஷ், பாலாஜி மற்றும் விஜயகுமார் ஆகியோர் பெயரை தனது அலைபேசியில் பதிவு செய்துவிட்டு, அவர்கள் தான் தனது தற்கொலைக்கு காரணம் என கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தமிழ்மணியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமாரபாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கந்து வட்டி கொடுமையால் பெண்களும், ஆண்களும் தற்கொலை செய்து கொண்டு வந்த சூழ்நிலையில், தற்பொழுது ஆன்லைன் ரம்மி மற்றும் கிரிக்கெட் சூதாட்டத்தில் கடன் சுமை ஏற்பட்டதால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.