கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் முனுசாமி, மல்லிகா(47) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குறிஞ்சி(20) என்ற மகள் இருக்கிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருத்தணியை சேர்ந்த சாய்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளிடைவில் காதலாக மாறியது. அதன் பின்னர் இவர்கள் தங்களது செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொண்டு, அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.
இதுகுறித்து குறிஞ்சியின் தாய்க்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் குறிஞ்சியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் குறிஞ்சி தாய் கூறுவதை கேட்காமல் தொடர்ந்து சாய்குமார் உடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய், தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தன் மகள் சாப்பிட இருந்த முட்டை பொரியலில் எலி மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதன் பின் தனது மகள் அதனை சாப்பிட்டதும் தான் அதில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக தாய் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குறிஞ்சி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரது தந்தை மற்றும் அண்ணனும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குறிஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குறிஞ்சியின் தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.