இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்திய அணி 04 போட்டிகளில் , 03-01 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 05-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 16 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கினார். மறுபுறத்தில் அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
இதற்கிடையில் திலக் வர்மா 24 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 02 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். அபிஷேக் சர்மா மற்றும் சிவம் துபே இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
இதில் ஷிவம் துபே 13 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக, ஹர்திக் பாண்ட்யா 09 ரன்னிலும், ரிங்கு சிங் 09 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
தொடர்ந்து அக்சர் படேல் களம் இறங்கினார். இந்திய அணியின் விக்கெட்டுகள் விழந்தபோதும் மறுமுனையில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி விரைவாகவே சதத்தையும் கடந்து அசத்தினார். அவர், 37 பந்துகளில் 05 பவுண்டரி, 10 சிக்சருடன் 100 ரன்களைக் கடந்தார்.
இதன் மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 02வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா தலா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தொடர்ந்து அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 07 பவுண்டரி, 13 சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன்படி, 10.3 ஓவர்களிலேயே 97 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் ஆவுட் ஆனது. இதன் மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றது.