திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியின் படதிறப்பு விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் அதன்பிறகு அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, நம்மை அனைவரையும் இன்று மனிதர்களாக தலை நிமிர வைத்த தலைவர்கள் அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ் போன்றவர்கள் தான். நாம் எப்போதும் கொள்கைகளுக்கு முதன்மையாக விளங்கக்கூடிய இயக்கம். தேர்தல் என்பது இடையில் வந்து போகின்ற ஒரு சாதாரண நிகழ்வாக மட்டும் தான் நாம் பார்க்கிறோம்.
அதனைப் போலவே எம்எல்ஏ மற்றும் எம்பி போன்ற பதவிகள் கூட நம்முடைய பயணத்தில் ஒரு இளைப்பாறல் என்று தான் சொல்ல வேண்டும். இன்று பெரியார் பற்றி வேண்டுமென்றே கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் தமிழகத்தில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் நின்று இயக்கக் கூடியவர்கள் யார் என்றும் அவர்கள் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே அவரை வீழ்த்த வேண்டும் என்று யார் முயற்சி செய்தார்கள் என்பதை நாடு அறியும் அதனை நாமும் அறிவோம்.
இந்த கும்பல் ஒவ்வொரு முறையும் முயற்சி எடுத்தும் தோற்றுப் போய் விழுந்தார்களே தவிர பெரியாரை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பெரியார் தான் வழிகாட்டி. எனவே அவரை விமர்சிப்பவர்களை என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.