விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா தங்களுடைய தோழமை கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலரும் தொடர்ந்து அவரை கண்டித்தனர். இதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனிடையே கட்சியை விட்டு நிரந்தரமாக நீங்கிய ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து தவெக கட்சியில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பதவியைப் பெற்ற கையோடு திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா அவரிடம் ஆசி பெற்றார்.
இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெக கட்சியில் இணைந்ததும் திருமாவளவனை சென்று சந்தித்துள்ளார். முதலில் நீ போ பின்னாடி நான் வருகிறேன் என்று கூட அதன் பொருளாக இருக்கலாம். திருமாவளவன் அவ்வளவு பாசமாக ஆதவ் அர்ஜுனாவை கட்டி அணைக்கிறார். வேறு கட்சிக்குச் சென்ற ஒருவரை அவ்வளவு மகிழ்ச்சியாக யாராவது வரவேற்பார்களா? திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா அல்லது முதலில் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்துவிட்டு, ஆதவன் கூட்டணியிலேயே இருப்பாரா என்பது இனிமேல் தான் தெரியவரும் என தமிழிசை பேசியுள்ளார்.