தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு அரசியல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.
இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், பேரறிஞர் அண்ணாவின் வழியில் எதிர் வரக்கூடிய சவால்கள் அனைத்தையும் சந்தித்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை நாங்கள் வழங்குவோம். அனைத்து நிலைகளிலிருந்தும் அதிமுக தோழர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இன்று அனைத்து தோழர்களும் ஒன்றிணைந்து எங்களை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் இந்த நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்கின்றோம். அண்ணாவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை கடைப்பிடித்து நடந்திருந்தால் தமிழகத்தில் இப்படிப்பட்ட மிகப்பெரிய தோல்வியை தந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று கனவு கண்டிருக்கும் திமுகவின் இந்த கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.