தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்... மத்திய அரசு தகவல்!
Dinamaalai February 04, 2025 01:48 PM

உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மாநிலங்களுக்குள்ளாக மண்டலங்களை விமான சேவை மூலம் இணைக்க வகை செய்யும் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையங்கள் எவை? அதற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன? எப்போது அவை பயன்பாட்டுக்கு வரும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார். 

இதற்கு மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் பதில் அளித்தார். அதில் ,உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றது; நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும். விமான சேவை மூலம் சிறுநகரங்களை இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த ஊர்களில் விமான நிலையங்களை அமைக்கும் பணியும் மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதில் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுவிட்டது. நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்து அது தொடர்பான லைசென்ஸ்களைப் பெறும் பணிகள் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் உட்பட 5 இடங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி விமான நிலையமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையத்தின் வசம் வந்ததும் கட்டட பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.