இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஓலா முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், ஓலா நிறுவனம் நாளை அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கான ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2023ம் ஆண்டில் மற்ற மின்சார பைக்குகளுடன் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸின் உற்பத்தி கடந்த மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் உள்ள ஓலாவின் ஃபியூச்சர் தொழிற்சாலையில் தொடங்கியது.
இந்த பைக்கின் வெளியீட்டுக்கு முன்னதாக பைக் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, ரோட்ஸ்டர் எக்ஸ் ஒரு குறைந்தபட்ச கருப்பொருள் மற்றும் கூர்மையான பேனல்களுடன் கூடிய எதிர்கால வடிவமைப்பைக் கொண்டுள்ளது.இது ஒரு ஒருங்கிணைந்த DRL உடன் கூடிய நேர்த்தியான செவ்வக LED ஹெட்லேம்ப் கிளஸ்டர், ஒரு தட்டையான ஒற்றை-துண்டு இருக்கை ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை 4.3-இன்ச் LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், LED ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள்; க்ரூஸ் கண்ட்ரோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் (ஓலா மேப்ஸ்), ரிவர்ஸ் மோட், க்ரூஸ் கண்ட்ரோல், OTA புதுப்பிப்புகள், டிஜிட்டல் சாவி ஆகியவை உள்ளன. இது தவிர டயர் பிரஷர் மானிட்டர், ஜியோ மற்றும் டைம் ஃபென்சிங், டோ மற்றும் திருட்டு கண்டறிதல், அவசரகால SOS மற்றும் உங்கள் வாகனத்தைக் கண்டறிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஏபிஎஸ் சிஸ்டம், முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலில் 11 கிலோவாட் மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் மாடல் 2.5 கிலோவாட், 3.5 கிலோவாட் மற்றும் 4.5 கிலோவாட் என மூன்று வேரியண்ட்களில் வெளி வருகிறது.
2.5 கிலோவாட் பேட்டரி பேக் மாடல் 105 கிமீ வேகத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் முழு சார்ஜில் 117 கிமீ பயணிக்கும். 4.5kWh பேட்டரி பேக் கொண்ட ரேஞ்ச்-டாப்பிங் ரோட்ஸ்டர் X, மணிக்கு 124 கிமீ வேகத்தில் 200 கிமீ தூரம் வரை செல்லும். அதாவது இந்த மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை செல்லும். மேலும் இந்த பைக் 2.8 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும் என்று ஓலா உறுதியளித்துள்ளது.
ரோட்ஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ என மூன்று மாடல்களில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் களமிறங்குகிறது. இதன் ஆரம்பக்கட்ட வேரியன்ட்டின் விலை ரூ.75,000 ஆகும். டாப் வேரியன்ட்டின் விலை ரூ.2.49 லட்சம் ஆகும்.