ஓட்டப்பிடாரம் அருகே 2-வயது குழந்தை அண்டாவில் உள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி காஞ்சனாதேவி. இந்த தம்பதியினர் 2 வயது மகள் சபீனா பானு என்ற சிறுமி அண்டாவில் சலவைக்காக வைக்கப்பட்டிருந்த துணியை வெளிய எடுத்து விளையாண்டு கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தலைக்குப்புற கவிழ்ந்து தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததை யாரும் பார்க்கவில்லை.
பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த பெற்றோர் சிறுமியை மீட்டு பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.அப்போது அங்கு பரிசோதனை செய்த செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்துள்ளனர். சிறுமியின் இறப்பு குறித்து பசுவந்தனை காவல் ஆய்வாளர் கோகிலா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.