பெண்களே திமுக அரசை நம்பி இனி பயனில்லை, உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் என்று, பாஜகவின் தேசிய மகிளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம் அருகேயுள்ள ஒரு அரசுப்பள்ளியில் 13 வயது சிறுமி அப்பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையையும், கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த வேற்று மாநில இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தையும் கேள்வியுற்று மிகுந்த மன வேதனையடைந்தேன்.
சொந்த மாநிலப் பெண்களையும், நம்மை நாடி வரும் மற்ற மாநிலப் பெண்களையும் காக்கத் தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவரின் ஆட்சியின் அவலட்சணத்தை யார் எடுத்துரைப்பது?
பெருகிவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்காமல், தங்கள் கையாலாகாத ஆட்சியின் மீது விழும் பழியைத் துடைப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்துபவரிடம் நமது குமுறல்கள் எடுபடுமா?
வழிதவறிய 13 வயது சிறுமியை போலிஸ் பூத்தில் வைத்து வன்கொடுமை செய்யும் காவலர்களைக் கொண்ட இந்த ஆட்சியில், புகாரளித்த பெண்களின் விவரங்களைப் பொதுவில் வெளியிட்டு பழிதீர்க்கும் இந்த நிர்வாகத்தில், போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும் பெண்களைப் பாலியல் கொடுமை செய்பவர்களுக்கும் கட்சிப் பொறுப்பு கொடுக்கும் முதல்வரிடன் பெண்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா?" என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.