கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!
Webdunia Tamil February 06, 2025 05:48 PM


கேரளாவில் கிணற்றில் விழுந்த கணவரை அவரது மனைவி தன்னந்தனியாக காப்பாற்றிய நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலம் எர்ணாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த ரமேஷன் என்பவர் நேற்று காலை மரத்தில் மிளகு பறித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பத்மம், உடனே அங்கிருந்த கயிறை பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளார்.

கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில், ரமேஷன் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார். ஒரு கையால் கயிறை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் தனது கணவரை தாங்கி நின்றுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத்துறையினர் வரும் வரை, தனது கணவரை அவர் தன்னந்தனியாக காப்பாற்றியுள்ளார்.

பின்னர், தீயணைப்பு துறையினர் வந்தவுடன், உடனடியாக கிணற்றில் இறங்கி இருவரையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் இருவருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தனது கணவரை காப்பாற்ற போராடிய பத்மம் மன தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.