![](https://shengbo-xjp.oss-ap-southeast-1.aliyuncs.com/Upload/File/2025/02/06/1752338632.jpg)
கிளாம்பாக்கம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மேற்குவங்க சிறுமி, ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை அடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில், சிறுமியை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, ஓடும் ஆட்டோவில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆட்டோவை துரத்திய போது, அந்த சிறுமியை நடுரோட்டில் இறக்கிவிட்டு, ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் முத்து தமிழ் செல்வம் மற்றும் தயாளன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட தயாளன் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
Edited by Mahendran