`அரசு வேலை' தருவதாக 21 பேரிடம் ரூ.1.37 கோடி வசூல்... `போலி பணி ஆணை' கொடுத்து மோசடி செய்த கும்பல்!
Vikatan February 07, 2025 12:48 AM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திரகுமார் ஆகியோர் எங்களுக்கு அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி கொடுத்து வருகிறோம் எனக் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய பிரகாஷ் மற்றும் உறவினர்கள் 7 பேர் அரசு வேலை வேண்டி 48 லட்ச ரூபாயை மகாலட்சுமி தரப்பிடம் கொடுத்துள்ளனர்.

இதேபோல அல்லிநகரத்தைச் சேர்ந்த வினோத் உள்ளிட்ட மாவட்டத்தில் மொத்தம் 21 பேரிடம் ஒரு கோடியே 37 லட்ச ரூபாயை இந்த கும்பல் வசூலித்துள்ளனர்.

ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளனர். பணத்தை திரும்ப கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்த சிலருக்கு போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து தேனி மாவட்ட எஸ்.பி.,யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கைதான கண்ணன்

மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பாலமுருகன், மோசடி செய்த மகாலட்சுமி, நாகேந்திரனை கைது செய்தார். இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் இடைத்தரகராக இருந்து மோசடிக்கு துணையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி தலைமையிலான போலீஸார் கண்ணனை கைது செய்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.