தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜாதிவாரி கணக்கெடுப்பில் திமுக மற்றும் பாஜக இரண்டும் ஒரே நேர்கோட்டில் செல்வதாக இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது மாநில அரசுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் சமூக நீதி பேசும் திமுக அதனை செய்ய மறுப்பது ஏன் என்று விஜய் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் பீகார், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் திட்டங்களை பிற மாநிலங்களில் செயல்படுத்துகிறார்கள் என்று பெருமை பேசும் திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பை மட்டும் ஏன் நடத்தவில்லை என்று சரமாரியான குற்ற சாட்டை முன் வைத்திருந்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜய் சொன்னது சரிதான். ஆனால் திமுக எப்போது நேர்க்கோட்டில் பயணித்தது. அவர்கள் நேர்கோட்டில் வந்தால் தான் எந்த பிரச்சனையும் இருக்காதே. பீகார், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகள் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய பாஜக அரசின் ஒப்புதல் தேவை கிடையாது. இந்த அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால் திமுகவினர் மத்திய அரசின் மீது பழி போட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று கூறினார்.