தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் இரண்டு நாட்கள் களப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கட்சி தொடங்கியவுடன் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறுவதெல்லாம் பொதுமக்களிடம் எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடிலும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் திமுக என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின் கட்சி தொடங்கியவுடன் முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்று கூறுகிறார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். இதற்காக அவர் அனைத்து முயற்சிகளையும் தற்போது எடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். அதோடு திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ளார். தொடர்ந்து விஜய் திமுகவை விமர்சித்து வரும் நிலையில் இன்று கூட சமூகநீதி பேசும் திமுக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பது ஏன் என்றும் மாநில அரசுக்கே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உரிமை இருக்கும்போது திமுக அதை செய்யாமல் பொதுமக்களை ஏமாற்றுகிறது என்றும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.