பிரபல உணவு நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ நிறுவனம், அதன் பெயரை Eternal என மாற்றுவதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பங்குதாரர்கள் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் ஒப்புதலையும் மற்ற சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலுக்காக சொமாட்டோ நிறுவனம் காத்திருக்கிறது.
சொமாட்டோ நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், உணவு விநியோக பிராண்ட் மற்றும் செயலியில் இருந்து நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சொமாடோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் பங்குதாரர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “பிளிங்கிட்டை கையகப்படுத்திய பிறகு, உணவு விநியோக பயன்பாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, சொமேட்டோவிற்கு பதிலாக "எடர்னல்" என்ற பிராண்ட் பெயரை உள்நாட்டில் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், “சொமாட்டோவை தாண்டிய ஒன்று எங்களின் நோக்கமாக எதிர்காலத்தில் மாறினால் அதற்கு எடர்னல் என பெயரிடுவோம் என நினைத்தோம். இன்று, பிளிங்கிட்டுடன், நாங்கள் அங்கே இருப்பதாக உணர்கிறேன். எனவே Zomato லிமிடெட் நிறுவனத்தை Eternal Ltd என மறுபெயரிட விரும்புகிறோம். எடர்னல் நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கும். அதாவது சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக்ட், ஹைபர்பியூர், எங்கள் வாரியம் இன்று இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் எங்கள் பங்குதாரர்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அது அங்கீகரிக்கப்பட்டால், எங்கள் நிறுவன வலைத்தளம் zomato.com இலிருந்து eternal.com க்கு மாறும். எங்கள் ஸ்டாக் டிக்கரையும் Zomato இலிருந்து Eternal ஆக மாற்றுவோம். எடர்னல் என்பது ஒரு சக்திவாய்ந்த பெயர். இது வெறும் பெயர் மாற்றம் அல்ல; இது ஒரு குறிக்கோள் அறிக்கை” என பதிவிட்டுள்ளார்.