Rajinikanth: "என் பாசிடிவிட்டிக்கான சீக்ரெட் இதுதான்..." - ஆன்மிக அனுபவம் பகிர்ந்த ரஜினிகாந்த்!
Vikatan February 07, 2025 09:48 PM
நடிகர் ரஜினிகாந்த் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்தில் க்ரியா யோக பயிற்சி பெறுவதற்காகச் சென்றிருக்கிறார். தனது அனுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “மூன்றாவது முறையாக நான் இந்த ஒய்எஸ்எஸ் ஆசிரமத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களாக இங்குத் தங்கியிருந்து ஆசிரமம் முழுவதும் பார்வையிட்டு நேரம் செலவிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய குருவோடு அமர்ந்து தியானம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் பார்ப்பவர்கள் நீங்கள் ரொம்ப பாசிடிவாக இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். அதற்கான சீக்ரெட் க்ரியாதான்.

ரஜினிகாந்த்

நான் க்ரியா( தியானம்) பண்ண ஆரம்பித்ததிலிருந்து எனக்குள் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. இது ஒரு விதமான அமைதி. 2002-ல் நான் க்ரியா செய்ய ஆரம்பித்தேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஆரம்பத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இவ்வளவு தூரம் செய்கிறோம். ஆனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லையே என்று நிறைய நாட்கள் நினைத்திருக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை என்று திரும்பவும் செய்ய ஆரம்பித்தேன்.

செய்ய ஆரம்பித்து 10 வருடங்களுக்குப் பிறகுதான் அதனுடைய மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அதனால் எப்போதும் ஒரு மன அமைதி, நிம்மதி கிடைக்கும். கஷ்டப்படாமலேயே எல்லாம் தானாக நடக்கும். இங்க இருக்கக்கூடிய குருக்கள் நம் கையை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் நாம் இதனை விட்டால் கூட அவர்கள் நம்மை விட மாட்டார்கள்.

ரஜினிகாந்த்

இது மிகவும் சீக்ரெட் டெக்னிக். இதனை யாரெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்கிறார்களோ அவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். இந்த க்ரியாவைச் செய்தால்தான் அதனுடைய பலன் தெரியும். இந்த ஒய்எஸ்எஸ் ராஞ்சி ஆசிரமத்திலிருந்து போகவே மனம் இல்லை. இனி வருடம்தோறும் இங்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தனது ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.