பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்; மனம் பதைபதைக்கிறது; உங்களுக்கு உறுத்தவில்லையா?- அண்ணாமலை
Top Tamil News February 07, 2025 10:48 PM

பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. 

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி தந்த அதிர்ச்சி நீங்கும் முன்னரே, இன்று ஒரு நாள் காலையில் மட்டும், மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள், வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அவலம், சேலத்தில், அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், திருப்பத்தூரில் வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை என, பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன.

எங்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம்? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப, கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது. பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.