மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மற்றொரு மாணவியம் பாலியல் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டியில் ஸ்ரீ குரு வித்யாலயா என்ற சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4 ம் வகுப்பு மாணவி ஒருவரை அதே பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் (வயது 54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக மாணவி குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்த போது அதில் மாணவியிடம் சம்மந்தப்பட்ட வசந்தகுமார் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் இதே நிறுவனத்தின் மற்றொரு மெட்ரிக் பள்ளியை சூறையாடினர். அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் நேற்று இரவு தொடங்கி நள்ளிரவு வரை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரையும், பள்ளி நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியலை தொடர்ந்தனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல டி.ஜ.ஜி.வருண்குமார், மாவட்ட போலீஸ் எஸ்பி., செல்வநாகரெத்தினம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மாணவியின் பாட்டி மணப்பாறை மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, அவரது கணவரும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருமான வசந்தகுமார், துணை தாளாளர் செழியன்.. முதல்வர் ஜெயலெட்சுமி ஆகிய 5 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயலெட்சுமி தவிர மற்ற அனைவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து முதல்வர் ஜெயலெட்சுமி இன்று மகளிர் காவல் நிலையத்தில் சரணமடைந்தார். இதனால் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட் கல்வி அலுவலர் (மெட்ரிக் தனியார் பள்ளிகள் பேபி. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி உள்ளிட்டடோர் தலைமையிலான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளியில் பள்ளி ஆசிரிய - ஆசிரியைகளிடம் முழுமையான விசாரணை நடத்தியதுடன் மாணவ- மாணவிகளின் பெற்றோரை தனித்தனியாக அழைத்து கேட்டறிந்தனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினமே மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் சீண்டல் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் ஒரு புகார் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மீண்டும் திங்கள் கிழமை விசாரணை நடத்த உள்ளதாகவும், அன்றையதினம் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
பள்ளி ஆசிரியர்களிடம் இதுகுறித்த தகவல் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கபடும் எனவும் தெரிவித்தார். பள்ளி உடைக்கப்பட்டதால் இரண்டு பள்ளிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தின் காரணமாக இரண்டு தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தேசிய செட்டியார் பேரவை மாநில தலைவர் ஜெகன்னாத் மிஸ்ரா இன்று மணப்பாறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மேலும் பள்ளி பாலியல் சீண்டல் சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற வஞ்செயல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.