தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாங்குடி பகுதி உள்ளது. இங்கு உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாராக வேலை பார்த்து வந்த சந்துரு என்ற 20 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இளம் பெண் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பெண் சந்துருவுடன் தகராறு செய்து அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சந்துரு நேற்றிரவு அண்ணாநகர் பகுதியில் தான் வேலை செய்த ஒரு வீட்டில் சம்பளப் பணத்தை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அங்கு பேச்சி என்பவரது வீட்டின் வெளியே அவர் காத்து நின்றார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்ததோடு அவர்கள் சந்துருவை கொல்ல முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்து சந்துரு அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் பேச்சியின் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் மர்ம கும்ப கும்பலும் நுழைந்தனர். அவர்கள் சந்துருவை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.