விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமசாமி- காசியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமசாமி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து, காசியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தேவைகளை நான்கு பிள்ளைகளும் அவ்வப்போது கவனித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 5-ம் தேதி மதியம், வீட்டில் காசியம்மாள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து தன்னை ஒரு பிசியோதெரபிஸ்ட் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மூதாட்டி காசியம்மாளிடம் நயமாக பேசிய அந்தநபர், உங்களுக்கு பிசியோ பயிற்சி அளிப்பதற்காக உங்கள் மகன்தான் அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.
இதை நம்பிய காசியம்மாள், அந்த இளைஞர் கூறியதுபோல் தான் அணிந்திருந்த மூன்று செயின், இரண்டு மோதிரம், நான்கு தங்க வளையல், 2 கம்மல் என சுமார் 13 பவுன் தங்கநகையை கழற்றி மேஜை மீது வைத்துள்ளார். அப்போது, காசியம்மாளின் கவனத்தை திசைத்திருப்பிவிட்டு தங்க நகைகளை திருடிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காசியம்மாள், நகை திருடு போனது குறித்து தனது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு விரைந்து வந்த பிள்ளைகள் நகை திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையில் அளித்த புகாரின்பேரில். ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி தலைமையிலான போலீஸார், தங்கநகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சி.சி.டி.வி. காட்சிகளில் நகைகளை கொள்ளையடித்து தப்பியோடிய திருடன் டூவீலரில் அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, டூவீலர் பதிவு எண் மற்றும் அங்க அடையாளம் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நகை திருட்டில் ஈடுபட்டவர் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ரகுராமன் (வயது 45) என தெரியவந்தது. இதையடுத்து அவரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், ரகுராமை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், காசியம்மாளிடம் நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், தான் பிசியோதெரபிஸ்ட் அல்ல, 8-ம்வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரகுராமை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.