தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 42 ஆம் ஆண்டு மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் தேனியில் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிவித்து, அடையாள அட்டை வழங்கினார்.
அப்போது பேசிய விக்ரமராஜா, ``மே 5 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தத்தில் நமது மாநாடு நடைபெற உள்ளது. அன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளித்து அனைவரும் பங்கேற்க வேண்டும். மாநாடு குறித்த சுவரொட்டிகள் ஒட்டுங்கள். நமது பேரமைப்பு கெடியை ஏற்றிவிட்டு மாநாட்டிற்கு வாருங்கள். அவ்வாறு செய்தால் மத்திய மாநில அரசுகளின் கவனத்தைப் பெற முடியும். விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
எங்கள் கட்சி கூட்டணிக்கு வந்தால் 5 தொகுதி தருவோம் என முக்கிய புள்ளி ஒருவர் கூறினார். ஆனால் எங்களுக்கு எதுவும் தேவையில்லை. சாதி மதங்களை கடந்த வணிகர் என்ற இனம் ஒன்று போதும் என அவரிடம் கூறிவிட்டேன். நம்முடைய மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோரை அழைக்க உள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ``இந்த மாநாட்டில் உள்ளாட்சி கடை , கட்டிட வரி, மின்சார வரி, குப்பை வரி , தொழில் வரி என பல்வேறு இடர்பாடுகள் போக்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அழைக்க இருக்கிறோம். மத்திய அரசு இயற்றும் சட்டங்கள், உணவு பாதுகாப்பு குறித்த துறை, வணிக வரித்துறை சட்டங்கள் இவற்றை எளிமைபடுத்த வேண்டும் என்ற முழக்கத்தோடு நமது மாநாடு துவங்க உள்ளது. இந்த மாநாடு 2026 யார் ஆட்சியில் அமர வேண்டும் என தீர்மானிக்கக் கூடிய மாநாடாக இருக்கும். நாங்கள் மாநாடு நடத்துவது ஆட்சியில் பங்கு கேட்கவோ தொகுதி கேட்கவோ இல்லை சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
வணிக வரித்துறை சார்பாக பிடித்து வைத்திருக்கின்ற வாகனங்களை விடுவிக்க வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் வியாபாரிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநாடு நடைபெறும். நாங்கள் அரசியல் சார்ந்த அமைப்பு கிடையாது. அரசு சார்ந்த அமைப்பு, எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம். கூட்டணியில் இடம் வேண்டாம் வணிகர்களுக்கு வேண்டிய சலுகைகளை கேட்பது தான் எங்கள் அமைப்பு.
வடநாட்டை சேர்ந்தவர்கள் இங்கு பணிபுரிகின்றனர் அவர்கள் புகையிலை பயன்படுத்தாமல் பணிக்கு வருவது கிடையாது. காவல்துறை இரண்டு பொட்டலங்கள் இருந்தாலே கைது செய்து விடுகின்றனர். அபராதம் 25 ஆயிரம் விதிக்கின்றனர். இதனால் வணிகர் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. புகையில் கம்பெனி தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய அனுமதி இருக்கும் போது விற்பனைக்கு மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும்” என்றார்.