தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு களப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டார். அதன் பிறகு இன்று நெல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒன்றிய அரசு புயல் நிவாரண நிதியை தராமல் பொதுமக்களை ஏமாற்றுவதாக கூறினார். அதோடு திருநெல்வேலி அல்வாவை விட ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தரும் அல்வா மிகவும் ஃபேமஸ் ஆக இருக்கிறது என்று கூறினார். பட்ஜெட்டில் கூட ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில் இதற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டு இந்திக் கூட்டணி கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே அது உங்களுக்கு நினைவில்லையா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் நேரில் சென்று உங்கள் டிராமா மாடல் பொய்களை பரப்ப வெட்கமா இல்லையா என்று பதிவிட்டுள்ளார். அதோடு அண்ணா அறிவாலயத்தை மு.க.ஸ்டாலினின் அல்வா கடை என்று விமர்சித்து போட்டோ வெளியிட்டு திமுக அரசு பொது மக்களுக்கு கொடுத்த அல்வாவை பட்டியலிட்டுள்ளார். மேலும் அதில்அல்வா வகைகள் என்று திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளாக சொல்லப்பட்டு அவற்றில் நிறைவேற்றப்படாததை குறிப்பிட்டுள்ளார்.