73 வயதுடையவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முறை 10 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த நிலையில், இது குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி காட்டியிருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிச்சை(73) இவர் வீட்டில் தனியே இருந்த 10 வயது சிறுமியை பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த நிலையில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து, விசாரணையின் சாட்சியங்களின் அடிப்படையில் இன்று (பிப்ரவரி 7) தீர்ப்பு வழங்கப்பட்டது. பிச்சை என்ற முதியவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காக தமிழக அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில், சிறுமியின் எதிர்கால வாழ்க்கைக்காக 6 லட்சம் ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, போலீசார் குற்றவாளியை பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.