``நடபாவாடை நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பு, எல்லோருக்குமான வாய்ப்பு.." -இயக்குநர் சி.இராமசாமி
Vikatan February 08, 2025 01:48 AM

தேசிய நாடகப் பள்ளி '24-வது பாரத் ரங் மஹோத்ஸவ் சர்வதேச நாடக விழாவினை' சத்தீஸ்கர் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் பிப்ரவரி மாதம் நடத்துகிறது.

இதில் புதுச்சேரியைச் சேர்ந்த `வெளிப்படை அரங்க இயக்கம்' என்ற நாடக அமைப்பைச் சேர்ந்த 'நடபாவடை' நாடகம் தேர்வாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்த சர்வதேச நாடக விழாவிற்கு இம்முறை நடபாவடை நாடகம் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடக நிகழ்வு வரும் பிப்ரவரி 8-ல் சத்தீஸ்கர் மாநிலத்தின் கைரேகர் என்ற இடத்தில் மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது.

சி. இராமசாமி

இது குறித்து நாடகத்தின் இயக்குநர் சி. இராமசாமியிடம் பேசும் போது,

" 2013 ஆம் ஆண்டு புதுச்சேரி குருவிநத்தம் கிராமத்தில் அரங்கச் செயல்பாட்டின் வழியாக கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மரபு சார்ந்த வாழ்வியலை எல்லோரிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும், எல்லோருக்குமான வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காகவும் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களோடு கலைப்பண்பாட்டு அமைப்பாக `வெளிப்படை அரங்க இயக்கம்' தொடங்கப்பட்டது.

நடபாவடை நாடகம் குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த ஈமச்சடங்கு செய்யும் ஒரு பெண்ணின் வாழ்வியலையும், வலியையும் பதிவு செய்யும் நோக்கில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டது. இந்த நாடகம் நேபாளம், மைசூர், சென்னை போன்ற பல இடங்களில் நடைபெற்ற நாடக விழாக்களில் தேர்வானது. இவ்வாறு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகம் சர்வதேச நாடக விழாவிற்கு தேர்வாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச நாடக விழாக்களில், தமிழ் நடபாவடை நாடகத்திற்கு கிடைத்திருக்கிற வாய்ப்பை எல்லோருக்குமான வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன். இந்த வாய்ப்பு இன்னும் எல்லோரையும் ஊக்கப்படுத்தும்னு நம்புறேன்." என்றார் சி. இராமசாமி

இந்நாடகத்தில் நடித்துள்ள மாணிக்கவேல் நம்மிடம் உரையாடும் போது,

"வெளிப்படை அமைப்போட நான் 7 வருசமா தொடர்ந்து இயங்கிட்டு இருக்கிறேன். எங்களுக்கு நடிக்கிறதுக்கான டிரெனிங் 6 மாதம் வரைக்கும் நடந்தது. அதுக்கப்புறம் 10 நாள்கள் குமரி நத்ததுல அந்த பெண்மணியோட இருந்து அவங்க வாழ்வியல் முறையை நேரடியா இருந்து கத்துக்கிட்டோம். கிட்டத்தட்ட ஏழு வருசமா இந்த அமைப்போட இயங்குறதுனால இந்த நாடகத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் நான் இருந்துருக்கேன்.

மாணிக்கவேல்

என்.எஸ்.டி-ன்னு சொல்லப்படுற தேசிய நாடகப் பள்ளியில படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா முடியல, இப்போ அதே இடத்துல போய் இந்த அமைப்போட சேர்ந்து நடிக்கப் போறது ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த அமைப்பில எங்களுக்கு நாடகம் மட்டும் சொல்லிக் கொடுக்காம சமூகம், அரசியல் சார்ந்த புரிதலையும் எங்களுக்குள்ள ஏற்படுத்துறாங்க. அதுதான் ரொம்ப அவசியம்ன்னு நினைக்கிறேன். தமிழ் நாடகத்து சார்பா வெளிப்படை அமைப்புல இருந்து நடபாவடை நாடகத்தை நடிக்கிறது மனதுக்கு நெகிழ்வாக இருக்கிறது" என்கிறார் மாணிக்கவேல்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.