Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
Dhinasari Tamil February 07, 2025 09:48 PM

#featured_image %name%

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர்
– 6 பிப்ரவரி 2025
தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணியை (47.4 ஓவர்களில் 248, ஜாஸ் பட்லர் 52, பெதல் 51, பில் சால்ட் 43, பென் டக்கட் 32, ஆர்ச்சர் 21, ஹர்ஷித் ராணா 3/53, ஜதேஜா 3/26, ஷமி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கட்) இந்திய அணி (38.4 ஓவர்களில் 251/6, ஷுப்மன் கில் 87, ஷ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52, மகமூத் 2/47, அதி ரஷீத் 2/49, ஆர்ச்சர், பெதல் தலா ஒரு விக்கட்) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் முதலில் மட்டையாடத்தீர்மானித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் விராட் கோலி ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது.

பவர்ப்ளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 77 ரன் எடுத்திருந்தது. பில் சால்ட் (26 பந்துகளில் 43 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), பென் டக்கட் (29 பந்துகளில் 32 ரன், 6 ஃபோர்), ஜோ ரூட் (19 ரன்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். ஹாரி ப்ரூக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆட வந்த ஜாஸ் பட்லர் (67 பந்துகளில் 52 ரன்), ஜேக்கப் பெதல் (64 பந்துகளில் 51 ரன்) இருவரும் சிறப்பாக ஆடியபோதும் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினர் மற்றும் விக்கட்டுகளும் எடுக்க ஆரம்பித்தனர்.

இன்று ஒருநாள் ஆட்டங்களில் முதன்முறையாகக் களம் இறங்கிய ஹர்ஷித் ராணா முதலில் அதிகம் ரன் கொடுத்தபோதும் மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். ரவீந்தர ஜதேஜா தன்னுடைய சுழல் ஜாலத்தில் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முழுமையாக ஆடமுடியாமல் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (22 பந்துகளில் 15 ரன்) மற்றும் ரோஹித் ஷர்மா (7 பந்துகளில் 2 ரன்) இருவரும் சோபிக்கவில்லை. அதன் பின்னர் வந்த அனைத்து இந்திய வீரர்களும் ரன்ரேட் ஆறுக்குக் குறையாமல் ஆடினர்.

ஷுப்மன் கில் (96 பந்துகளில் 87 ரன், 14 ஃபோர்), ஷ்ரேயாஸ் ஐயர் (36 பந்துகளில் 59 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) அக்சர் படேல் (47 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) என அனைவரும் சிறப்பாக ஆடினர். இறுதியில் 38.4 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்புவது கவலையளிக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்ட நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில், இரவுபகல் ஆட்டமாக பிப்ரவரி 9ஆம் நாள் நடைபெறும்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.