கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 8 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 25-ந்தேதி மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் நாடு முழுவதும் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாக செயல்பட்ட அபு சலாம் அலி என்ற நபரை அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், அபு சலாம் அலி சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினருடன் இணைந்து அசாம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் படி, செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கியிருந்த அபு சலாம் அலியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.