பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி மக்கள் போராடி வருகின்றனர். அங்கு, ஹர்னி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, பேருந்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை, இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹர்னி நகரில் சீனாவுடன் ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்படும் இந்த நிலக்கரி சுரங்கத்தில் 24 மணி நேர சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.