மும்மொழி கொள்கையை எதிர்த்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தை ஒருபோதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கையில் படித்தவர்களில் சுமார் 99 சதவீதம் பேர் உலகம் முழுவதும் பல துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு சொன்ன ஹிந்தியை அனுமதித்த ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களுடைய தாய் மொழியை இன்று இழந்து நிற்கின்றன.
தமிழகத்தில் அனுமதித்தால் அந்த நிலைமை தான் இங்கும் வரும். தமிழகம் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாது. இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் மற்றொரு மொழிப்போரை சந்திப்பதற்கு தமிழகம் ஒருபோதும் தயங்காது. தங்களுடைய கட்சி பெயரில் அண்ணாவையும் திராவிடத்தையும் வைத்துள்ள அதிமுக எங்களை பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திவிட்டு அரசியல் செய்யாமல் மும்மொழி கொள்கையை எதிர்த்து தெருவில் வந்து போராட வேண்டும். தமிழகத்திற்கு நிதி வழங்காவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக விரைவில் மாறும். இந்தப் போராட்டம் இத்துடன் முடிவுக்கு வருவதும் தொடர்வதும் மத்திய அரசின் கையில் தான் உள்ளது என உதயநிதி ஆவேசமாக பேசியுள்ளார்.