மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 11 வயதான காதுகேளாத, செவித்திறன் இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போனார். பின்னர் அடுத்த நாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டார். அதில் சிறுமியை பார்த்த சிலர் சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால் உடனடியாக அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 8-ம் தேதி அச்சிறுமி உயிரிழந்தார். இதில் குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் குற்றவாளியை 46 இடங்களில் உள்ள 136 கேமராக்களில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி ரமேஷ் சிங் என்பவர் என தெரிய வந்தது.
அதோடு குற்றம் நடந்த இடத்தில் அந்த நபர் அலைந்து திரிந்ததும் கண்டறியப்பட்டது. பிறகு பிரக்யராஜ் வரை சென்று தீவிர சோதனை நடத்தியதில் குற்றவாளி கும்பமேளாவில் குளிக்க சென்றதும் இறுதியில் ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதும் தெரிய வந்தது. அந்த வகையில் ரயிலில் வந்த கிட்டத்தட்ட 400 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் ரமேஷ் சிக்கிக்கொண்டார். அதோடு தான் செய்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். பிறகு அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் பல குற்றங்களை செய்துவிட்டு சுதந்திரமாக நடமாடும் நபர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தள்ளது.
அது மட்டுமல்லாது இவருக்கான மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர் 2003 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றசாட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்து பின்னர் 2013ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளிவந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டு தொழில் நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு தற்போது 11 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியையும் இவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.