திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு பகுதியில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசரகள் தங்கும் பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஊர் கிராமங்களில் வழிபடும் சாமி சிலைகளை கொண்டு வந்து இந்த பங்களாவில் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் இந்த அரண்மனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இது 17 – 18 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட அரண்மனை என்றும் அந்த நூற்றாண்டை சார்ந்த ராஜாக்கள் ஓய்வு எடுத்த அரண்மனை என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். இந்த அரண்மனையின் வடிவமானது சிற்றரசர்கள் தங்கி வரி வசூல் செய்த அரண்மனையாக இருக்கின்றது என்றும் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கவர்னர் மாளிகை மற்றும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று இந்த அரண்மனையும் காட்சி அளிக்கின்றது. இந்த பங்களா செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையினால் கட்டப்பட்டது. மேலும் 4 தூண்கள் அமைக்கப்பட்டு முழுவதுமாக கட்டப்பட்டுள்ளதால் ஒவ்வொரு செங்கலும் அழகான வடிவத்துடன் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதோடு தேக்கு மரங்களால் மேல் பகுதியும் கீழ் பகுதி நான்கடி உயரத்திற்கு 12 அடி அகலத்திற்கும் முழுவதுமாக கட்டப்பட்டுள்ளது. இதை பார்வையிட்டு சரி செய்த பிறகு முழுவதுமாக மக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படும் என தொல்லியல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.