1980ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச்சைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், டிசம்பர் 2018-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். கோவிட்-19 தொற்றுநோய், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கித் இயக்குநராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகை, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவரை உலகளவில் சிறந்த மூன்று மத்திய வங்கி தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது. குறிப்பாக, குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2024 இல் சக்திகாந்த தாஸ் 'A+' மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ரிசரவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சித் துறை (DoPT) சனிக்கிழமை பிறப்பித்தது. பி.கே. மிஸ்ரா செப்டம்பர் 11, 2019 முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது