Vijay: ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு காரணமே இயக்குனர் உருவாக்கும் கதைதான். கதைக்குதான் வெற்றியே தவிர அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு இல்லை. இது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் பொருந்தும். ரஜினி நடித்தால் படம் ஹிட் என்றால் பாபா, தர்பார், லிங்கா, லால் சலாம் போன்ற படங்கள் ஓடியிருக்கும்.
ரஜினியே நடித்தாலும் கதையும், திரைக்கதையும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். கதை நன்றாக இருந்தால் யார் நடித்தாலும் ஓடும் என்பதற்கு இங்கே பல படங்கள் உதாரணமாக இருக்கிறது. ஆனால், முன்னனி நடிகர்களாக பார்க்கப்படும் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்கள் கதையை நம்பாமல் இந்த கதையில் நமக்கு என்ன இமேஜ் என்று மட்டுமே யோசிப்பார்கள். அதனால்தான், நல்ல கதைகளை அவர்கள் மிஸ் பண்ணுகிறார்கள்.
இதில் சூர்யா மட்டும் கொஞ்சம் உஷார். அஜித் நடிக்க வேண்டிய கஜினி படத்தில் அவர் நடித்து ஹிட் கொடுத்தார். அதே சமயம் சில முக்கிய கதைகளை அவர் மிஸ் பண்ணியிருக்கிறார். அதேபோல் விஜயும் பல ஆக்ஷன் கதைகளை அதன் அழுத்தம் புரியாமல் மிஸ் பண்ணியிருக்கிறார்.
விஷாலை வைத்து லிங்குசாமி இயக்கிய திரைப்படம் சண்டக்கோழி. இந்த கதையை விஜயிடம் சொல்ல லிங்குசாமி போனபோது பாதி கதையை கேட்டு விட்டு நிறுத்த சொல்லிவிட்டார் விஜய். ‘ராஜ்கிரண் உள்ளே வந்தபின் எனக்கு இந்த கதையில் என்ன இருக்கு?’ என சொல்லி ‘இதில் நான் நடிக்கவில்லை’ என சொல்ல மீதி கதையை கேட்டு விடுங்கள் என லிங்குசாமி சொல்லியும் விஜய் கேட்கவில்லை. எனவே, விஷாலை வைத்து படத்தை எடுத்தார் லிங்குசாமி. படமோ சூப்பர்.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய லிங்குசாமி ‘சண்டக்கோழி ஹிட் அடித்ததும் ஒரு பார்ட்டியில் விஜயை பார்த்தேன். ‘நீங்க செகண்ட் ஆஃப் கேட்கலயே’ என நான் சொன்னதும் ‘அந்த பையன் இண்டஸ்ட்ரிக்கு வரணும்னு இருக்கு சார். அவருக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு. கிளைமேக்ஸ் ஃபைட் பின்னிட்டார்’ என சொன்னார். எனக்கும் அப்படித்தான். கதை மேல் பெரிய நம்பிக்கை இருந்தால் வண்டி நிற்காது. விஜய் வேண்டாம்னு சொன்னதும் சூர்யாகிட்ட போனேன். அதுவும் நடிக்கவில்லை. இந்தக் கதையில் யார் நடித்தாலும் ஹிட் என நம்பியதால்தான் விஷாலை நடிக்க வச்சேன்’ என பேசியிருக்கிறார்.
மேலும், ‘விஷால் இப்போ பிரபாஷ் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர். எங்கோ மிஸ் ஆகிவிட்டது. அவரின் அரசியல் பார்வை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், அவருக்கு நல்ல மனசு இருக்கு. சின்ன வயதிலேயே நடிகர் சங்கத்திற்கு வந்தார். பெரிய ஷோ நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார். அவர்கிட்ட ஏதோ இடைவெளி வந்துடுச்சி. சரி ஆகும்’ என பேசியிருக்கிறார்.