இத்தனை வருஷம் ஆசையாசையாய் வளர்த்த ஒரே மகன் தற்கொலைச் செய்துக் கொண்டதை அறிந்த பெற்றோர் நிலைக்குலைந்து போனது கோவை ரத்தினபுரி காலனியை சோகத்தில் ஆழ்த்தியது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியில் வசித்து வருபவர் நல்ல சிவம். இவர் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராதாமணி. இவர் விஸ்வநாதபுரத்தில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். இவர்களின் ஒரே மகன் 21 வயது நதீன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.சி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நதீன் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டில் யாரும் இல்லை. அவர் திடீரென்று வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. டியூசன் முடிந்ததும் வீட்டுக்கு வந்த ராதாமணி நீண்டநேரமாக கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது நதீன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து நதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நதீன் தற்கொலை குறித்து போலீசார் ” மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம். அவரது செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் மற்றும் மடிக்கணினி தகவல்கள் சேகரிக்கப்பட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
தங்களது மகனின் திடீர் தற்கொலை முடிவால் நதீனின் பெற்றோர் கதறி துடித்து அழுத காட்சி காண்பவர் கண்ணில் நீரை வரவழைத்தது.