போலீஸ் ஸ்டேஷன் வாசலில் விஷம் குடித்த இளைஞர்.. மருத்துவமனையில் அனுமதி!!
Dinamaalai February 23, 2025 11:48 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மனைவி கொடுத்த புகாரின் பேரில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது, கோவில்பட்டி காவல் நிலைய வாசலில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையைச் சேர்ந்தவர் மாரிராஜ் (30), விவசாயியான இவருடைய மனைவி முருகலட்சுமி. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முருகலட்சுமி கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தோட்டிலோவன்பட்டியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் முருகலட்சுமி தனது கணவரிடம் இருந்து நகைகள் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று தருமாறு கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாரிராஜை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறும், அப்போது முருகலட்சுமியின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறும் போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று மாரிராஜ் மனைவியின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்தார். ஆவணங்களை ஒப்படைத்தபின் அவர் காவல் நிலைய வாசலில் வைத்து திடீரென்று விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், ‘நான் விஷம் குடித்து விட்டேன், சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்’ என்று கூச்சலிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே மாரிராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இது குறித்து மாரிராஜ் கூறுகையில், ‘‘நானும், மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம். எனது மகளையும் மனைவி அழைத்து சென்றதால், மகளைப் பார்க்க முடியாமல் தவித்து வருகிறேன். என் மகளைப் பார்க்க முயற்சி செய்த போதெல்லாம் காவல் நிலையத்தில் மனைவி புகார் செய்தார்.

இதனால் போலீசாரால் அலைக்கழிக்கப்பட்டேன். எனது மனைவி, குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கூறினேன். அது நடக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்’’ என்றார்.

னைவி கொடுத்த புகாரில் கோவில்பட்டியில் விசாரணைக்காக வந்த வாலிபர் காவல் நிலைய வாசலில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.