ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா டாஸை தோற்றார். இதன் மூலம் அவர் தனி சாதனையை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் ஆடுகளம் நேரம் போகப் போக மெதுவாக இருக்கும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் நாங்கள் வென்றிருந்தால் கூட பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். எனவே டாஸில் தோற்றாலும் இந்தியா அணிக்கு பாதகம் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் இது ரோகித் சர்மாவுக்கு பாதகமாக முடிந்துள்ளது.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய கடைசி 12 போட்டிகளிலும் டாஸில் தோற்றுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா டாஸை வென்றிருந்தார். உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலிருந்து, இன்றைய போட்டி வரை தொடர்ந்து 12 முறை அவர் டாஸில் தோற்றுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து அதிக முறை டாஸை தோற்ற அணியாக நெதர்லாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. இதற்கு முன் நெதர்லாந்து ஒரு நாள் அரங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 11 டாஸ்களை தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.