மும்மொழி கொள்கை விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்வதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப இந்த முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், "மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை பார்த்தால் உண்மை நிலை மக்களுக்கு தெரியவரும்.'' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ''மத்திய அரசை பற்றி மாநில அரசு தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் தவறான கருத்துக்களை திரித்து சொல்ல கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 03-வது மொழியை யாரும் படிக்கக்கூடாது என்று தெரிவித்தால், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை கற்க மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்? தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அரசியல்?'' எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ''கட்டாயம் இந்த மொழி தான் கற்க வேண்டும் என புதிய கல்வி கொள்கையில் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் தாய் மொழி தான் அவசியம். தமிழகத்தில் தமிழ் தான் முக்கியம் அதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும், 02-வது மொழி ஆங்கில மொழி அதிலும் மாற்று கருத்து கிடையாது. வசதி பெற்றவர்கள் தான் 03-வது மொழி கற்க கூடிய சூழல் உள்ளது.'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ''ஏழை மக்களின் குழந்தைகள் இன்னொரு மொழி கற்க கூடாதா? தங்களின் அரசியலை திணிப்பதற்காக மாணவர்கள் விஷயத்தில் தமிழக அரசு செயல்படுவது வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் அதிகரித்துவரும் போதை பழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமையை மறைப்பதற்கு தி.மு.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இப்படி அரசியல் செய்யக்கூடாது" என்று ஜி.கே.வாசன் மேலும் கூறியுள்ளார்.