ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் லஞ்சம்… விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க… தமிழக அரசை விளாசிய சீமான்…!!!
SeithiSolai Tamil February 23, 2025 02:48 PM

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவசாயிகள் வியர்வை சிந்தி அரும்பாடு பட்டு விளைத்த நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசால் தமிழ்நாட்டின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளால் வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வெயிலிலும் மழையிலும் தங்களுடைய கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டி விவசாயிகள் காலம் காலமாக போராடி வருகிறார்கள்.

நெல்லின் ஈரப்பதம் 20% வரை அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட 17 சதவீதம் ஈரப்பத அளவில் மட்டுமே தமிழக அரசே நெல் கொள்முதல் செய்து வருகின்றது. சராசரியாக ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்ற வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடித்தம் செய்யப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் ஏற்றுக் கூலி, இறக்கு கூலி மற்றும் வண்டி வாடகை என்று கூறி ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் என ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 40 ரூபாய் வரை நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

விவசாயிகள் ஒவ்வொரு மூட்டை நெல்லுக்கும் ஒன்றறை கிலோ நெல்லும் 40 ரூபாய் பணமும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை உறிஞ்சும் சிறிதும் மனசாட்சி அற்ற கொடுஞ்செயலாகும். எனவே தமிழகத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளை தடுத்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.