ஏற்கெனவே கார் ரேஸில் நடிகர் அஜித் விபத்திற்குள்ளாகி உயிர் தப்பிய நிலையில், மீண்டும் நடிகர் அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது ரசிகர்களைப் பதற செய்துள்ளது. 'தல’ இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்று சமூக வலைத்தளங்களில் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
'விடாமுயற்சி' படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டது.
அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற போது, அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது.
நேற்று ஸ்பெயின் நாட்டில் வாலென்சியா நகரில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது காரை முந்திச்செல்ல முயன்ற இன்னொரு கார் பலமாக மோதியது. இதில் அஜித் குமாரின் கார் 3 முறை பல்டியடித்தது. இதில் சிக்கிய அஜித் குமார், அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.