ஜெர்மனி பொது தேர்தல்; முன்னிலை வகிக்கும் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி..!
Seithipunal Tamil February 24, 2025 04:48 AM

ஐரோப்பா நாடுகளின் ஒன்றானஜெர்மனியில் இன்று பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் அந்நாட்டின் எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக்கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு நவம்பரில், கூட்டணியை கட்சியை சேர்ந்தவரான நிதியமைச்சரை அதிபர் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிபர் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி., கட்சியும் கடும் போட்டியை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி., சார்பில் ஆலீஸ் வீடெல், பசுமை கட்சியின் ராபர் ஹபெக், ஆகியோர் அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில், இன்று தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், ஏ.எப்.டி., கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம், ஜெர்மனியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிபர் ஸ்கால்ஸ், 'எலான் மஸ்க் செய்வது மிகவும் அருவருப்பாக உள்ளது' என்று விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த தேர்தலில், வலதுசாரி ஏ.எப்.டி., கட்சி வெற்றி பெறாவிட்டாலும், கூடுதல் ஓட்டுகளை பெற்று, நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.