`கருணாநிதிக்கு மனமிருந்தது; ஸ்டாலினுக்கு மனமில்லை' - கும்பகோணம் வன்னியர் சங்க மாநாடு ஹைலைட்ஸ்
Vikatan February 24, 2025 09:48 PM
சோழ மண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாடு

கும்பகோணம், தாராசுரம் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள திடலில் வன்னியர் சங்கம் சார்பில் சோழ மண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ம.க.ஸ்டாலின் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடைக்கு வந்ததும் ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றாக கூட்டத்தை பார்த்து கை அசைத்தனர். அப்போது காடுவெட்டி குரு கட்-அவுட்டை உயர்த்தி பிடித்த படி ஒருவர் நின்றார்.

வன்னியர் சங்கம் சார்பில் நடந்த மாநாட்டில்

ராமதாஸும், அன்புமணியும் அருகருகே அமர்ந்திருந்தும் நீண்ட நேரமாக ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பேசிக் கொள்ளவில்லை. திரண்டிருந்த கூட்டத்தை பார்த்த ராமதாஸின் கண்கள் லேசாக கலங்கின. மாநாட்டிற்கு வந்தவர்கள் ஆங்காங்கே காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றியிருந்த டாஸ்மாக் கடைகள் மதியத்திற்கு மேல் மூடப்பட்டன.

இதில், டாக்டர் ராமதாஸ் பேசியதாவது, ``அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரையும் ஒடுக்ககூடாது. இந்தியாவில், 4,694, தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகள் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமுத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றதாழ்வுகள் உள்ளது. இதனால் தான் சாதிவாரி கணகெடுப்பை நடத்த வேண்டும் என்கிறோம். ஆந்திராவில் பிற்படுத்த பட்டோர்களுக்கு வேலைவாய்ப்பு, கடன் உதவிகள் திட்டம் உள்ளது. ஆனால் நாங்கள் வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

வன்னியர் சங்கம் சார்பில் நடந்த மாநாட்டில்

45 ஆண்டுகளுக்கு முன்பு, சாதிவாரி கணகெடுப்பு தேவை. வன்னியர்களுக்கு 20 சதவீத, பட்டியிலன மக்களுக்கு 22 சதவீத இடஓதுக்கீடு என்ற தீர்மானத்தை வன்னியர் சங்கம் துவங்கிய போது சொன்னோம். மூன்று முறை கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு கிடைத்தும், சிலரின் சதியால் அது நடைபெறவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. கர்நாடக, தெலங்கான உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?. சமூக நல்லிணக்கத்திற்கு தடையாக போதை பொருட்கள் இருக்கின்றன. ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம் வேண்டும். ஆனால் இது குறித்து மக்களுக்கு தெளிவு பிறக்கவில்லை. 2026ல் பிறந்து விடும்.

ரேஷன், நுாலகம் இல்லை. ஆனால், சந்து, பொந்துகளில் மதுக்கடை உள்ளன. சமூக ஆர்வலர்கள் மதுக்கடையை ஒழிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும். மது இல்லாவிட்டால் வேலை வாய்ப்பு, சமுதாய நல்லிணக்கம் பெருகும்” என்றார்.

அன்புமணி ராமதாஸ், ``ராமதாஸ், அவர்களின் இலக்கு நமக்கு சமூகநீதி வேண்டும் என்பது தான். இம்மாநாடு டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மாமல்லபுரத்தில், நடைபெற உள்ளது தான். நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நமக்கும் யாரும் எதிரி கிடையாது. ஏழ்மை, அறியாமை, மது, போதை தான் நமக்கு எதிரி. இதை அழிக்க வேண்டும் என போராடி வருகிறோம்.

கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாடு

தி.மு.க இரண்டு சமுதாயத்தை பிரித்து ஆட்சிக்கு வருகிறது. நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் ஸ்டாலினிடம், நாங்கள் கேட்பது, தமிழகத்தில் சாதி வாரி கணகெடுப்பை நடத்தி, நுாறு சதவீத மக்களுக்கும் இட ஓதுக்கீட்டை வழங்குங்கள் என்பது தான். ராமதாஸ் அவர்களுக்கு தமிழக மக்களை பற்றி தான் சிந்தனை. தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் சாதிவாரி கணகெடுப்பை நடத்தி, இட ஓதுக்கீடு மட்டுமில்லை. சமூக நல திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர். இது தான் எங்களுக்கு வேண்டும்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். எங்களிடம் அந்த அதிகாரம் இல்லை என்றால் கூட, அதிகாரத்தை உருவாக்குவோம். இது சமூக நீதி பிரச்னை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதிகாரம் இருந்தும் பொய் சொல்லி வருகிறார். நிச்சயம் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில், அனைத்து பின்தங்கிய சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். அது வரும் தேர்தலில், நிச்சயமாக பிரதிபலிக்கும். தமிழகத்தில் 69 சதவீத விழுக்காட்டை காப்பாற்ற, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

காவல் துறையினருடன் வாக்கு வாதம்

கருணாநிதிக்கு சாதிவாரி கணகெடுப்பை நடத்த மனமிருந்தது. அதனால் தான் ராமஸ்தாஸுடன் இணைந்து சமூகநீதிக்காக பலவற்றை கருணாநிதி செய்தார். கருணாநிதி மனதில் சமூகநீதி உணர்வு இருந்தது. ஆனால், அதிகாரம், நிதி, சட்டம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த உணர்வும், மனமும் இல்லை. அனைத்து சமுதாயம் ஒற்றுமையாக முன்னேறினால் தான், தமிழகம் முன்னேற்றம் அடையும். இது தான் உண்மையான முன்னேற்றம். எங்களுக்கு வேண்டியது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. எங்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

அனைத்து சமூகத்திற்கும் இட ஓதுக்கீடு வழங்கி, சமூக நல திட்டங்களை வழங்க வேண்டும். இதை அமைதியாக நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். அரசியலுக்காகவும், தேர்தலுக்காவும் இதை பேசவில்லை. பின் தங்கியவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்றதால் சாதி ஒழியும். சாதியை வைத்து அரசியல் செய்ய எங்களுக்கு விரும்பம் இல்லை. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதுகாவலராக இருப்பவர் ராமதாஸ். டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சட்டத்தை கொண்டு வருவதற்கு காரணமானவர் ராமதாஸ். ஆனால் விவசாயிகள் எங்களுக்கு வாக்களிக்க மறுப்பது ஏன் என தெரியவில்லை” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.