"திருப்பரங்குன்றத்தை வைத்து மதநல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கிறார்கள்" - அரிபரந்தாமன்
Vikatan February 25, 2025 12:48 AM

மதுரை மத நல்லிணக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்புகள் சொல்வதென்ன என்பது குறித்தும், வரலாற்று உண்மைகள் என்ன என்பது குறித்தும் நடந்த சட்டக் கருத்தரங்கத்தில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

சட்ட கருத்தரங்கம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி அரிபரந்தாமன், "சச்சரவு ஏற்பட்டிருக்கும் திருப்பரங்குன்றம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்துக்கும் அப்போதைய ஆங்கில அரசுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக 1917 இல் தொடரப்பட்ட வழக்கில் 1923 இல் தீர்ப்பளித்த நீதிபதி ராம் ஐயர், மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு மண்டபம், கொடிமரம், படிக்கட்டு பாதை பள்ளிவாசல் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றபோது, மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக அப்போது லண்டனில் செயல்பட்டு வந்த உச்ச நீதிமன்றத்தின் பிரிவியூ கவுன்சிலின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 1931இல் அளித்த தீர்ப்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலையைக் குவாரியாக்க இரண்டு முறை முயற்சி செய்து மக்களின் எதிர்ப்பால் கைவிட்டனர். 1815 ஆம் ஆண்டில் அரசின் மானியப் பதிவேட்டில் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா பராமரிப்புக்காகத் தனக்கன்குளம் கிராமம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த பதிவேட்டில் சிக்கந்தர் மலை, கந்தர் மலை என்று இரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது மதுரை மக்களோ திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மக்களோ இந்த பிரச்னையை எழுப்பவில்லை. அங்கு நிலவும் சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் வெளியிலிருந்து வரும் நபர்கள் செயல்படுகிறார்கள். பாபர் மசூதி பிரச்னை வந்தபோது மற்ற வழிபாட்டுத் தலங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, 1991இல் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, 1947 இல் சுதந்திரம் பெற்றபோது வழிபாட்டுத் தலங்கள் எங்கெங்கு எப்படி இருந்ததோ அது அப்படியே தொடர வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது 10க்கு மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் பிரச்னைகளை எழுப்புகிறார்கள். நம் நாடு வல்லரசாக வேண்டுமென்றால், மக்கள் மத ரீதியாக மோதிக்கொள்ளாத வகையில் 1991 இல் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரி பரந்தாமன்

ஆடு, கோழியை முருகன் கோயிலில் வெட்டினால்தான் தவறு, தர்காவில் வெட்டுவது தவறில்லை. பலியிடுவது அவரவர் விருப்பம். இதை எப்படித் தடுக்க முடியும்? கண்ணப்ப நாயனாரே இறைவனுக்கு மாமிசம்தான் படைத்தார். அசாமில் உள்ள காமாக்யா கோயிலில் எருமை மாட்டை நேர்த்திக் கடனாக வெட்டுகின்றனர். பா.ஜ.க அரசு அதைத் தடுத்து நிறுத்துமா? அவர்கள் நிறுத்தினால் நாம் எல்லாவற்றையும் நிறுத்தலாம்.

திருப்பரங்குன்றத்தை வைத்து மீண்டும் ஒரு மத மோதலுக்கான முயற்சி நடைபெறுகிறது. மதுரை அமைதியான நகரம். அதைக் கெடுக்கும் முயற்சி நடக்கிறது. உண்மையில் இந்த விவகாரத்தைப் பெரிதாக்கியது காவல்துறையும், ஆட்சியரும்தான்" என்றார்

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பேசும்போது, "திருப்பரங்குன்றம் மலையில் முதலில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சைவர்கள். சமணக்கோயிலில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து அதனைச் சைவக் கோயிலாக மாற்றியதைத் திருப்பரங்குன்றத்திலுள்ள கல்வெட்டு கூறுகிறது. மிகவும் சிறுபான்மைச்சமூகமான சமணர்களின் கோயில் 13ஆம் நூற்றாண்டில் சைவர்களால் கபளீகரம் செய்யப்பட்டது. இதற்கடுத்து நூற்றாண்டுகளில்தான் மதுரையில் சுல்தானியர் ஆட்சி தொடங்கியது. வீரபாண்டியனுக்குப் பட்டம் சூட்டியதால் கோபமான சகோதரன் சுந்தரபாண்டியன், 1311இல் மாலிக்கபூரைப் பாண்டிய நாட்டுக்குப் படையெடுத்து வர ஏற்பாடு செய்கிறான். அதற்குப் பின்புதான் மதுரையில் 40 ஆண்டுகள் சுல்தானின் ஆட்சி நடைபெற்றது. சுல்தான்களின் 10 மன்னர்களில் கடைசியாக ஆண்டவர்தான் சிக்கந்தர் ஷா. அவர் உயிர் நீத்த இடத்தில்தான் தர்கா கட்டப்பட்டுள்ளது.

சாந்தலிங்கம்

நாட்டு விடுதலைக்குப் பின் வந்த சட்டத்தின் அடிப்படையிலும், தொல்லியல் சட்டத்தின் அடிப்படையிலும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி 300 மீட்டர் தூரத்துக்கு யாரும் எந்த ஆக்கிரமிப்பும் செய்ய முடியாது. சட்டத்தை அனைவரும் பின்பற்றினாலே எந்த குழப்பமும் வராது" என்றார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.