நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் 27-ஆம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீமான் விஜயலட்சுமி விவகாரம்
தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, சீமான் ஏமாற்றி விட்டதாகவும், அவரால் ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றும் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ஆம் ஆண்டு புகாரளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் கொடுத்த சில மாதங்களில் வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.
அதேபோல 2023-ஆம் ஆண்டு சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகாரளித்தார். அந்த புகாரையும் அவர் வாபஸ் பெற்றார்.
இந்தநிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 19-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், சீமான் மீதான பாலியல் வழக்கை 12 வாரங்களுக்குள் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.