அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது’ என்று காவிரி டெல்டா விவசாயிகள் புலம்பி வருகிறார்கள்.
பருவம் தப்பிப் பெய்த மழையாலும் பனிப்பொழிவாலும், அறுவடையான நெல்லில் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. இதனால், ‘வழக்கம்போல் 17 சதவிகித ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யாமல், 22 சதவிகித அளவு வரை ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.
இதைத் தொடர்ந்து, நெல்லின் ஈரப்பதம் தளர்வு குறித்து டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் கடந்த மாதம் ஆய்வு நடத்தினார்கள். ஆனால், ஈரப்பதம் தளர்வு குறித்து இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் மழை, பனிக் காலங்களில் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படுகிறது. ‘இந்த ஈரப்பத உச்சவரம்பு வானிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும்’ என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கடந்த 2023-ம் ஆண்டுகூட இதுபோல ஈரப்பதப் பிரச்னை ஏற்பட்டபோது, ‘ஈரப்பத அளவைக் கூட்டி நெல் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று மாநில அரசும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன. அதன் பிறகு, 22 சதவிகித ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த முறை மத்திய அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது, விவசாயிகளை அச்சம் அடையச் செய்துள்ளது.
மழையும் பனியும் அதிகரிக்கும்போது இந்தப் பிரச்னை வருவது வாடிக்கைதான். எனவே, ‘வரும்காலங்களில் 22 சதவிகித ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்வதைக் கொள்கை முடிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பருவ மழைக் காலங்களில் நெல் ஈரப்பதம் அதிகரிப்பதைத் தடுக்க, மாநில அரசும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
அதாவது, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்தும் நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க நிதி ஒதுக்க வேண்டும். அந்த இயந்திரங்கள் முழுமையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் நெல் ஈரப்பத பிரச்னை முடிவுக்கு வரும். மாநில அரசும் விவசாயிகளும் மத்திய அரசின் அறிவிப்புக்காக ஏங்கித் தவிக்கும் நிலையும் உருவாகாது.
- ஆசிரியர்