திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூன்றாவது மகள் நிஷா பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் இன்று மீண்டும் சவுதிக்கு செல்வதற்கு டிக்கெட் எடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய சகோதரிகள் இருவருடன் நிஷா வீட்டில் இருந்த நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாக நிஷா வெளியே வராததால் சந்தேகமடைந்த சகோதரிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்தில் கத்தியால் அறுத்துக் கொண்டு நிஷா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக குடும்பத்தினர் நிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் நிஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அதாவது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் போது அங்கு ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த நிஷா விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அவரால் மன வேதனையில் இருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.